×

பொங்கலையொட்டி தர்மபுரியில் 10 டன் வண்ண கோலப்பொடி தயாரிப்பு: உலர்த்தும் பணி பாதிப்பு

தர்மபுரி: தர்மபுரியில், பொங்கலையொட்டி 10 டன் வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், வெயில் இல்லாத சீதோஷ்ணத்தால் உலர்த்த முடியாமல் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. தமிழகத்தில், மார்கழி மாதத்தில் தினந்தோறும், வீடுகளின் முன் வண்ண கோலம் போட்டு, அதில் பூசணி பூக்களை வைத்து வழிபடுவதை  பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டும், வீடுகள் மற்றும் தெருக்களில் வண்ண கோலங்கள் போடுவது வழக்கம். பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தர்மபுரி உட்பட பல்வேறு பகுதிகளில் வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், தற்போது பனிப்பொழிவு மற்றும் குளுமையான சீதோஷ்ண நிலை காரணமாக, கோலப்பொடி தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, கோலப்பொடி தயாரிப்பாளர்கள் கூறியதாவது:  மார்கழி மற்றும் பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுதோறும் பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், கருஞ்சிவப்பு, உள்ளிட்ட 12 விதமான வண்ணங்களில், 10 டன் வரை கோலப்பொடி தயாரிப்போம். கடந்தாண்டு ஒரு கிலோ வண்ண கோலமாவு ரூ48க்கு விற்பனை செய்தோம். நடப்பாண்டில் கோலப்பொடிக்கு தேவையான மரவள்ளி கிழங்கு ரூ3400ல் இருந்து ரூ3800ஆக விலை உயர்ந்துள்ளது. இதே போல் சாயங்களின் விலை, கூலி ஆட்களின் கூலி உயர்வு காரணமாக, கோலமாவின் விலையை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டியுள்ளது.  

நடப்பாண்டில் கிலோ ரூ60 என விற்பனை செய்கிறோம். கடந்த ஒரு மாதமாக கோலமாவு தயாரிக்கும் பணி நடந்த போதும், 10 டன் கோலப்பொடியை தயாரிக்க முடியவில்லை. வெயில் சுள்ளென அடிக்காததால் கோலப்பொடியை உலர்த்தும் பணி தாமதமாகி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Pongaliyoti Dharmapuri , Pongaliyoti, Dharmapuri, Golapodi
× RELATED பொங்கலையொட்டி தர்மபுரியில் 10 டன் வண்ண கோலப்பொடி தயாரிப்பு